தன்னிடம் டியூசன் படிக்க வராத மாணவனை கணக்கு வாத்தியார் செய்த செயல்! தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன்!

தன்னிடம் டியூசன் படிக்க வராத மாணவனை கணக்கு வாத்தியார் செய்த செயல்! தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன்!



10'th student died for teache student

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த சிங்கம்- அமுதா தம்பதியினரின் மகன் பாலாஜி என்ற மாணவன் உசிலம்பட்டியில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அப்பகுதியில் கணித ஆசிரியர் ரவி, தனியாக டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாணவன் பாலாஜி கடந்த வருடம் 9ம் வகுப்பு படித்த போது ரவியின் டியூசன் சென்டரில் படித்துள்ளார். தற்போது 10ம் வகுப்புக்கு வந்தவுடன் அவருடைய டியூசன் சென்டருக்கு செல்லாமல், வேறொரு டியூசன் சென்டருக்கு சென்று படித்ததாக கூறப்படுகிறது.

 இதனால் மாணவர் பாலாஜி மீது அந்த கணித ஆசிரியர் ரவி கடும் கோபத்தில் இருந்ததாகவும், அடிக்கடி ஏதேனும் காரணத்தைக் கூறி, வகுப்பில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

student

இந்நிலையில் மாணவன் பாலாஜி சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். அன்றையதினம் கணித பாடவேளையில் ஆசிரியர் ரவி வகுப்பறைக்கு வந்ததும் பாலாஜியை கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் அவ்வாறு அடிக்கடி நடந்துகொள்வதால் மனமுடைந்த பாலாஜி சனிக்கிழமை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று யாரிடமும் பேசாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில், தனியாக இருந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலாஜி எழுதிவைத்த கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், "தன்னுடைய மரணத்திற்கு ஆசிரியர் ரவிதான் காரணம் என்றும் அவருடைய கொடுமை தாங்காமல் இந்த முடிவை எடுத்ததாகவும், அவருக்கு தண்டனை வாங்கித்தர வேண்டுமென்றும், அனைவருக்கும் இறுதி வணக்கம்" எனவும் மாணவன் பாலாஜி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.