சற்று முன்.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு 48 மணி நேர கெடு விதித்து... அதிரடியாக பறந்த வக்கீல் நோட்டீஸ்..!!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜி.பானுபிரகாஷ் ரெட்டி சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்கவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என புகார்
பானுபிரகாஷ் ரெட்டி சார்பில் வழக்கறிஞர் கே.அஜய்குமார் அனுப்பியுள்ள நோட்டீஸில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவைச் செயல்படுத்தாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு மேலே உள்ள இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிவிட்டதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் உத்தரவு செல்லும்
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதால், அந்த உத்தரவு தானாகவே நிறுத்தி வைக்கப்படாது என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவை நிறுத்தி வைக்கவோ, மாற்றியமைக்கவோ செய்யும் வரை அதனை அமல்படுத்துவது அரசு அதிகாரிகளின் கடமை எனவும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
48 மணி நேரத்திற்குள் பதிலளிக்க கோரிக்கை
நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, அதனைச் செயல்படுத்தத் தவறியதற்கான காரணம் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.