உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும்; சபரிமலை விவகாரம் பற்றி ரஜினி கருத்து
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும்; சபரிமலை விவகாரம் பற்றி ரஜினி கருத்து

பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவுற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும்; அதேசமயம் மதங்களின் நம்பிக்கைகளையும் சம்பிரதாயங்களையும் மதிப்பதும் அவசியம்" என தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் மாதம் கட்சியை பற்றி அறிவிக்க போவதில்லை. நேரம் காலம் பார்த்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சபரிமலை விவகாரம் பற்றி அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ரஜினிகாந்த் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்:
"எல்லாவிதத்திலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் கோவில் என்று வரும் பொழுது ஒவ்வொரு கோவிலுக்கும் பல சடங்குகள் இருக்கும். காலம் காலமாக பின்பற்றி வரும் சம்பிரதாயங்களை நாம் மதிக்க வேண்டும். அப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் யாரும் தலையிடக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து" என்று கூறியுள்ளார்.
இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்துவது போன்றதா என்ற கேள்விக்கு, இல்லை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சடங்குகள் ஆகியவற்றை பொறுமையாக பார்த்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.