ஆல்ரெடி 2 இருக்கு! இப்போ.. மலை உச்சியில் தல தோனி கட்டும் 3-வது வீட்டின் பிரம்மாண்டம்..! 3 மாடி பிளான் G+1 ஆக மாறியது... 12 அறைகள்..! சுவாரசிய பின்னணி வீடியோ..!!,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் கட்டுமானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஏற்கெனவே ராஞ்சியில் இரண்டு வீடுகளை வைத்துள்ள தோனி, தற்போது மூன்றாவது வீட்டைக் கட்டி வருகிறார். இந்நிலையில், புதிய வீட்டின் கட்டட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 தள வீடு.. 7 மீட்டர் உயர கட்டுப்பாடு
ராஞ்சியின் ரிங் ரோடு பகுதியில் உள்ள செம்போ என்ற இடத்தில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் இந்த புதிய வீடு கட்டப்படுகிறது. முதலில் மூன்று தளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான வீட்டை அமைக்க திட்டமிட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வீடு கட்டப்படவுள்ள நிலம் விவசாய நிலம் என்ற வகைப்பாட்டில் இருப்பதால், கட்டுமானத்துக்கு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால், ராஞ்சி பிராந்திய வளர்ச்சி ஆணையமான RRDA, அதிகபட்சமாக 7 மீட்டர் உயரம் வரை மட்டுமே கட்டடம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது . இதையடுத்து, மூன்று தளங்களுடன் கட்ட திட்டமிடப்பட்ட வீடு, தரைத்தளம் மற்றும் ஒரு மேல்தளம் கொண்ட G+1 வடிவமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
12 அறைகள்.. இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வசதி
தோனியின் புதிய வீட்டில் பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலைப்பாங்கான பகுதியில் வீடு அமைவதால், அங்கிருந்து ராஞ்சி நகரின் இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும். வீட்டின் அருகே CRPF முகாம் இருப்பதால் பாதுகாப்பு வசதிக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தளத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 3 தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் 4 அறைகள் என மொத்தம் 12 அறைகள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட உள்ளன.
பொழுதுபோக்கிற்காக பிரத்யேக திறந்தவெளி பகுதி
வீட்டின் பின்புறத்தில் சுமார் 15 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட திறந்தவெளிப் பொழுதுபோக்கு பகுதியும் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நிலத்தின் வகைப்பாடு மற்றும் கட்டுமான விதிமுறைகள் காரணமாக மூன்று தளங்களுடன் உருவாகவிருந்த தோனியின் புதிய வீடு, தற்போது இரண்டு தளங்களாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டின் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெறவுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் தோனி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.