எதுக்கு இப்படியெல்லாம் பொய் சொல்லணும்..! தீப்தி ஷர்மாவை சாடிய இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன்.!

எதுக்கு இப்படியெல்லாம் பொய் சொல்லணும்..! தீப்தி ஷர்மாவை சாடிய இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன்.!



heather knight talk about deepthi sharma

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது பந்துவீசிய தீப்தி ஷர்மா, மறுமுனையில் இருந்த சார்லெட் டீனை  'மன்கட்' முறையில் ரன் அவுட் செய்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய 'மன்கட்' முறையில் தீப்தி ஷர்மா ரன்-அவுட் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்து வீரர்கள் பலர் இந்த ரன்-அவுட் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தனர். அதேபோல் அஸ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீப்தி சர்மா செய்தது விளையாட்டு விதிமுறைப்படி சரியானதாகும் என்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தீப்தி ஷர்மா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பந்து வீசும் முன்பு கிரீசை விட்டு முன்னோக்கி செல்ல வேண்டாம் என்று சார்லி டீனை பலமுறை எச்சரிக்கை செய்தோம். மேலும், நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் கிரீசை விட்டு வெளியே சென்றபடி இருந்தார். இதனால் தான் அவரை ரன்-அவுட் செய்தேன். கிரிக்கெட் விதிமுறையின்படி தான் நாங்கள் செயல்பட்டோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீப்தி சர்மா அளித்த பேட்டிக்கு இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹெதர் நைட் பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஹெதர் நைட் தனது டுவிட்டர் பதிவில், ஆட்டம் முடிந்து விட்டது. முறைப்படி சார்லி டீன் ஆட்டமிழந்துள்ளார். இந்த ஆட்டத்திலும் தொடரிலும் வெல்ல தகுதியான அணி இந்தியா. ஆனால் சார்லி டீனுக்கு எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை.

அவர்கள் அதை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் சார்லி டீனின் விக்கெட்டை முறைப்படி எடுக்கவில்லை என ஆகிவிடாது. ஆனால் ரன் அவுட் செய்தது சரியென்றால் எச்சரிக்கை குறித்து பொய் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.