புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வாழ்வா சாவா போராட்டத்தில் மெகா வெற்றியை சுவைத்த பெங்களூரு..!! ப்ளே-ஆப் வாய்ப்பை தவறவிட்ட ராஜஸ்தான்..!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஜெய்ப்பூரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி- பாப்-டு-பிளிசி ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. நிதானமாக விளையாடிய தொடக்க ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் பட்டாசாய் வெடிக்க, டூ-பிளசி நிதானமாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 33 பந்துகளை சந்தித்த மேக்ஸ் வெல் 54 ரன்களுடனும், டூ-பிளசி 55 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த லோம்ரோர் 1, தினேஷ் கார்த்திக் 0 அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த அனுஜ் ராவத் 29 ரன்கள் குவித்ததால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.
இதனை தொடர்ந்து 172 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் தடுமாறியதால் பவர் பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதன் பின்னரும் தடுமாறிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்தனர். அந்த அணியின் சிம்ரன் ஹெட்மயர் 19 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வெறும் 10.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ராஜஸ்தான் அணி 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றுள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இரண்டு அணிகளுமே களமிறங்கிய நிலையில், ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.