தாயின் வாக்குமூலம்-அம்மாவுடன் சேர்ந்து பெற்ற பச்சிளம் குழந்தை கை, கால்களை மடக்கி கழுத்தை நெரித்து கொன்றார்
தாயின் வாக்குமூலம்-அம்மாவுடன் சேர்ந்து பெற்ற பச்சிளம் குழந்தை கை, கால்களை மடக்கி கழுத்தை நெரித்து கொன்றார்

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி, சென்னை வேளச்சேரி பிரதான சாலை, கன்னிகாபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில், பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தை ஒன்று இறந்துகிடந்துள்ளது.அதைப் பார்த்தவர்கள் கிண்டி போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். பச்சிளம் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணையில் களமிறங்கினர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனையில், மூச்சுத் திணறி இறந்திருப்பதாகவும், அதன் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐக்கள் சதீஷ்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், குழந்தை கிடந்த குப்பைத்தொட்டி பகுதியில் தீவிரமாக விசாரித்தனர்.
போலீஸாருக்கு முக்கியத் தகவல் கிடைத்தது. `கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை வீட்டில் இல்லை' என்று போலீஸாரிடம் சிலர் தெரிவித்தனர். இதனால் அங்குச் சென்ற போலீஸார் வீட்டிலிருந்த விஜயா, வசந்தி ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
``கிண்டி கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயா (50). இவர், துப்பரவுப் பணியாளராக உள்ளார். இவரின் மகள் வசந்தி (22). இவர், வேலைப்பார்த்த இடத்தில் போரூரைச் சேர்ந்த ஜெயராஜ் (25) என்பவர் பணியாற்றியுள்ளார். ஜெயராஜ், வசந்தி ஆகிய இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதில் வசந்தி கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், அதை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துள்ளார் வசந்தி.
வசந்தியின் வயிறு பெரியதானதைப் பார்த்ததும் விஜயா கேட்டுள்ளார். அப்போதுதான் வசந்தி கர்ப்பமான தகவல் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா, வசந்தியைத் திட்டியுள்ளார். கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்று கேட்டுள்ளார். அப்போது வசந்தி, முழு விவரத்தை தெரிவித்ததோடு, ஜெயராஜ் குறித்தும் கூறியுள்ளார். உடனே ஜெயராஜிடம் வசந்தியின் குடும்பத்தினர் பேசியுள்ளனர். அவரும் வசந்தியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு முன்பே வசந்தி கர்ப்பமான தகவல் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அவரின் குடும்பத்தினர் கருதியுள்ளனர். இதனால் கர்ப்பத்தை கலைக்க அவர்கள் முடிவுசெய்துள்ளனர். ஆனால், கர்ப்பத்தை கலைத்தால் வசந்தியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவமனையில் தெரிவித்துவிட்டனர். இதனால் வசந்தியை வெளியில் எங்கும் அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளார் விஜயா.
செப்டம்பர் 17-ம் தேதி வசந்திக்கு வீட்டிலேயே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகை குரல் வெளியில் கேட்டுவிடாமல் விஜயா பார்த்துள்ளார். குழந்தை பிறந்த தகவலை ஜெயராஜுக்கு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு குழந்தையைக் கொன்றுவிடலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இதற்காக, வீட்டில் இருந்த குத்துப்போனி என்ற அகலமான பாத்திரத்தில் குழந்தையை அமுக்கி வைத்துள்ளனர். பிறகு, அந்தப் பாத்திரத்தை அவர்கள் மூடிவைத்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி அந்தப் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது.
யாருக்கும் தெரியாமல் குழந்தையின் சடலத்தை வீட்டிலிருந்து 200 அடி தூரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்துள்ளனர். பிறகு, எதுவும் நடக்காதுபோல அவர்கள் சகஜமாக இருந்துள்ளனர். ஆனால், எங்களின் விசாரணையில் குழந்தையைக் கொலைசெய்து குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் தெரிந்துவிட்டது. இதனால் விஜயா, வசந்தி, ஜெயராஜ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
வசந்தி கொடுத்த வாக்குமூலத்தில், `பிறந்த குழந்தைக்கு நான் பால்கூட கொடுக்கவில்லை. அந்தக் குழந்தையின் முகத்தைக்கூட நான் சரிவர பார்க்கவில்லை' என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
தவறான பிறப்பு, சில காரணங்களுக்காக குழந்தைகளை வளர்க்க முடியாதவர்களுக்காகத்தான் தொட்டில் குழந்தை திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டத்தில், வசந்தி தன்னுடைய குழந்தையைச் சேர்த்திருந்தால், போலீஸாரின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்திருக்கலாம். குழந்தையும் உயிரோடு இருந்திருக்கும். ஆனால், அவமானம் என்று கருதி குழந்தையை கொலைசெய்த குற்றத்துக்காக தாய், காதலன் ஆகியோருடன் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் வசந்தி. இனிமேலாவது, அபிராமி, உமா, வசந்தி பட்டியலில் எந்தப் பெண்ணும் இடம்பிடிக்காமல் இருக்க வேண்டும்!.