தேர்தல் ஆணையத்தின் திடீர் முடிவால்.. விழிபிதுங்கி நிற்கும் எடப்பாடி தரப்பு... நடந்தது என்ன?

தேர்தல் ஆணையத்தின் திடீர் முடிவால்.. விழிபிதுங்கி நிற்கும் எடப்பாடி தரப்பு... நடந்தது என்ன?


with-the-sudden-decision-of-the-election-commission-wha

சென்னை, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு தரப்பிற்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும்  மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்கள்) ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கவுள்ளது. மேலும் சென்னை தலைமை செயலகத்தில் மாநில அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கவுள்ளது. 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட ஒன்பது கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியிருந்தார். அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து இன்பதுரையும், பொள்ளாட்சி ஜெயராமனும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பிற்கு அழைப்பு வரவில்லை என தெரிந்தவுடன் ஓபிஎஸ் உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் உடனடியாக போனில்  பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நாங்கள் தான் உண்மையான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். எனவே, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு எங்களுக்கு தான் அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நீங்களும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வாருங்கள் என்று ஓபிஎஸ் அணிக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அழைப்பு விடுத்த இரண்டு மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி கொண்டு அதிமுகவின் இரண்டு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக ஓ பன்னீர்செல்வம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடமும், டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடமும் பேசியதன் விளைவாக தான் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது அதிமுகவில் ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியையும், இன்னொரு தரப்பினருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் அனைத்து கட்சி கூட்டம் விவகாரத்தில் எங்கள் தலைவர் சாதித்து விட்டார். ஆனால் எடப்பாடி தரப்பால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் தான் உண்மையான அதிமுக. அப்படி இருக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தான் அழைப்பு அனுப்ப முடியும். ஓ பன்னீர்செல்வத்திற்கு எப்படி அழைப்பு அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம் தேர்தல் ஆணையத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதால் எடப்பாடி தரப்பினர் அமைதி காத்து வருகின்றனர்.