முரண்டு பிடிக்கும் தேமுதிக; பழம் எந்த பாலில் நழுவி விழப்போகிறது!

முரண்டு பிடிக்கும் தேமுதிக; பழம் எந்த பாலில் நழுவி விழப்போகிறது!


which-side-will-dmdmk-go-for-alliance

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிக கட்சி எந்த அணியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது கடைசிவரை இழுபறியாகவே இருந்து வந்தது. "பழம் நழுவி பாலில் விழும்" என்ற நம்பிக்கையோடு கலைஞர் கருணாநிதியும் இருந்து வந்தார். ஆனால் கடைசியில் ஒன்றுக்கும் உதவாத மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தது தேமுதிக. இதனால் அந்த கட்சிக்கு ஏற்கனவே இருந்த வாக்கு வங்கி சதவிகிதமாக குறைந்ததே மிச்சம்.

இந்நிலையில் அதேபோன்ற இழுபறி சூழ்நிலையை தேமுதிக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் கையாண்டு வருகிறது. ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலமின்றி இருக்கும் இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு இழுபறி அந்தக் கட்சியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதா என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. எந்தவித கொள்கையோ நிபந்தனைகளோ இல்லாமல் எங்கு அதிகமான சீட்டுகள் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்தில் தேமுதிக செயல்பட்டு வருவதாக பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

dmdk

சட்டமன்ற தேர்தலில் இதுபோன்ற செயல்பாட்டால் அக்கட்சி குறிப்பிட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை இழந்தது. மீண்டும் அதே போன்ற செயல்பாட்டால் என்ன மாதிரியான பிரிவு அக்கட்சியில் உண்டாகும் என்பதை கட்சி நிர்வாகிகள் நிச்சயம் உணர வேண்டும். அந்தக் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி வெறும் விஜயகாந்த் முகத்திற்கு மட்டுமே என்பதை அதன் நிர்வாகிகள் இன்னும் உணர்ந்தது போல் தெரியவில்லை. உடல் நலம் இன்றி இருக்கும் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வர முடியவில்லை எனில்  ஏற்கனவே இருக்கும் வாக்கு வங்கி நிச்சயம் குறையும் நிலை உண்டாகும்.

இந்த உண்மை நிலையை அக்கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருந்தாள் கூட்டணிக்காக இப்படியெல்லாம் இழுத்தடிக்க மாட்டார்கள். வெளியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது; நமக்கான ஆதரவாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை அக்கட்சி நிர்வாகிகள் முதலில் ஆராய வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்த போது` இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை' என ஸ்டாலின் விளக்கம் அளித்தாலும், ` அரசியல் உட்பட அனைத்தும் பேசப்பட்டது' என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. இந்த முரண்பாடான கருத்து தேமுதிகவின் தலைமையின் மீது ஒரு மாதிரியான வெறுப்புணர்வை உண்டாக்கியுள்ளது.

dmdk

இந்நிலையில் தேமுதிக கூட்டணி நமக்கு நிச்சயம் தேவை என்றவாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். எனவே அவர்களை பற்றி அவதூறாக பேசாமல் கூட்டணியில் அவர்களை எப்படி சேர்த்துக் கொள்வது என்பதை பற்றி மட்டும் யோசித்து செயல்படுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் நல கூட்டணி போல் மீண்டும் ஒரு மூன்றாவது கூட்டணியில் தேமுதிக இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்க போகிறதா; அப்படியே சந்தித்தால் அந்த கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்திற்கும் கூடியவிரைவில் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். காத்திருப்போம்!