அரசியல் தமிழகம்

யார் இந்த செந்தில் பாலாஜி! இன்றைய தலைப்பு செய்தியாய் அவர் மாறியது எப்படி!

Summary:

Senthil balaji history

அமமுக கட்சியில் இருந்து விலகி 1500 தொண்டர்களுடன் திமுகவில் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் இன்றைய தமிழகத்தின் தலைப்பு செய்தி. கரூர் மாவட்டத்தில் பிறந்த இவர் எப்படி இந்த அளவிற்கு வளர்ந்தார் என்பதை பார்க்கலாம் வாங்க. 

கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தார் வி. செந்தில்குமார். இவர் பின் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். 

கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்புத் தேறிய அவர், கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். அரசியல் ஆர்வத்தின் காரணமாக அப்படிப்பை 16.4.1995 ஆம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டார். 

பட்டப்படிப்பை 1995ஆம் ஆண்டில் இடைநிறுத்தம் செய்த செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2000மார்ச் 13ஆம்நாள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

- 2000 செப்டம்பரில் அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 
- 2004ஆம் ஆண்டு அதே கட்சியின் கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆனார். 
- 2007 மார்ச் 11ஆம் நாள் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆனார். 


- 2007 மார்ச் 21ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆனார்.
- 2015 சூலை 27ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்த போது அவருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தார். பின்னர் 4½ ஆண்டுகளை கடந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. உடனே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

2016 தேர்தலில் விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதி மாற்றி வழங்கப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரத்தில் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடையவே செந்தில்பாலாஜி, சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் தீவிரமாக ஆதரிக்க தொடங்கினார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதனால் தனக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தார்.

கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் முதன்மை தளகர்த்தாவும் ஆன செந்தில் பாலாஜி தனது முதல் கட்சியான தி.மு.க.வுக்கு தாவ இருப்பததாலே இன்று தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். 


Advertisement