ரூல்ஸ் போட்ட ஸ்டாலின்! துணை, இணைலாம் வேணாம்... நேராகவே கனிமொழி கேட்ட அந்த ஒரே பதவி! ஆடிப்போன அறிவாலயம்...!!!
சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில், எதிர்கால தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை புதிய கட்டுப்பாடுகள்
கூட்டத்தில் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கிளைக் கழகச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட உள்ளது. ஒருவரே தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே அந்தப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஒட்டுமொத்தமா மாற போகுது.... ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! இனி இவர்களுக்குப் பதவி கிடையாது... திமுக - வில் நடக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்...!!!
அதேபோல், கட்சிப் பணிகளை மேலும் பரவலாக்கும் வகையில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 70-ல் இருந்து 110 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு? திமுகவில் பரவும் தகவல்
கட்சியின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தொடர்பாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் மேலும் அதிகாரமிக்க பொறுப்பு ஒன்றை அவர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. தற்போது பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், முதன்மைச் செயலாளராக கே.என்.நேருவும் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பதவிகளில் ஒன்றை கனிமொழி எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் நிர்வாகிகளின் கோரிக்கை என்ன?
முன்னதாக மகளிரணிச் செயலாளராக பணியாற்றிய கனிமொழியிடம், கட்சியின் பெண் நிர்வாகிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்சி மாற்றங்களின்போது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. குறிப்பாக, 33 சதவீத இடஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கை தொடர்பாகவும் கனிமொழி, மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், திமுகவின் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அடுத்தகட்டமாக என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ளது.
புதிய நிர்வாகப் பொறுப்புகள், வயது வரம்புகள் மற்றும் பதவிக்கால கட்டுப்பாடுகள் குறித்த முடிவுகள் நடைமுறைக்கு வரும் நிலையில், கனிமொழி எம்.பி.-க்கு வழங்கப்பட உள்ள பொறுப்பு குறித்தும் கட்சிக்குள் கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக- விழும் அதிரடி மாற்றம்! அறிவாலயத்தில் அரங்கேறும் அடுத்தகட்ட அரசியல்.... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!!