அம்மாவும், மகனும் மாறி மாறி கொடுத்த டார்ச்சல்... நாத்தனாருக்கு அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்..! மாடல் அழகி தற்கொலை வழக்கில் சிபிஐ திடுக்கிடும் குற்றப்பத்திரிகை..!!!



model-actress-dwisha-sharma-dowry-harassment-cbi-charge

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மாடல் அழகியும் நடிகையுமான த்விஷா ஷர்மா மரணம் தொடர்பான வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வரதட்சணை கொடுமை மற்றும் தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது தாயார் கிரிபாலா சிங் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கணவர், மாமியார் மீது சிபிஐ குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா ஷர்மா, கடந்த மே 13-ம் தேதி போபாலில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மகள் வரதட்சணை கொடுமை மற்றும் தொடர்ந்து அளிக்கப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரிழந்ததாக அவரது தந்தை நவ்நீதி ஷர்மா புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது தாயாரான முன்னாள் மாவட்ட நீதிபதி கிரிபாலா சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, தற்போது போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், த்விஷாவின் கணவர் சமர்த் சிங் தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அதற்கு மாமியார் கிரிபாலா சிங் ஆதரவளித்து ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர் துன்புறுத்தலால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலே த்விஷாவை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியதாக விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் த்விஷா கர்ப்பமாக இருந்ததாகவும், குடும்பத்தில் நிலவிய கசப்பான சூழல் காரணமாக கர்ப்பத்தை கலைக்க அவர் முடிவு செய்ததாகவும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தம்பதியிடையே ஏற்பட்ட மோதல் மேலும் தீவிரமடைந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முன் அனுப்பிய WhatsApp தகவல்

த்விஷா உயிரிழப்பதற்கு முந்தைய நாள், அதாவது மே 12-ம் தேதி இரவு, தனது நாத்தனார் ராஷிக்கு அனுப்பிய WhatsApp குறுஞ்செய்தி வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதில், “உன் அண்ணனிடம் அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்” என த்விஷா குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலுடன் த்விஷாவின் ஐபோன், வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை விசாரணையின் முக்கிய பகுதியாக உள்ளன. மேலும், த்விஷா ஷர்மா மரணம் தொடர்பான குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அவை கிடைத்த பிறகு வழக்கில் மேலும் முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் நிலையில், கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ திரட்டியுள்ள ஆதாரங்கள் குறித்து நீதிமன்ற விசாரணையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.