லண்டன் பயணம் முதலீட்டுக்கா? இன்பச் சுற்றுலாவா? தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நிர்வாகம், தொழில் முதலீடுகள், மின்சாரம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, முதல்வர் விஜயின் லண்டன் பயணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருந்தால் சம்பந்தப்பட்ட தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஏன் அழைத்துச் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கானதா அல்லது வேறு நோக்கத்துக்கானதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என கூறிவிட்டு, வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். மின் உற்பத்தியை அதிகரித்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்டை மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய மின் கொள்முதல் மற்றும் திட்டமிடல் குறித்து விமர்சனம் தெரிவித்தார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அரசு அலுவலகங்களில் லஞ்சப் பணம் கைப்பற்றப்படுவது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் வந்த முதல் ஆப்பு! சந்திப்பை மறுத்த அன்புமணி? பின்னணியில் இருக்கும் தவெக... தலைகீழாக மாறிய இடைத்தேர்தல் ஆட்டம்..!!!

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக அரசுக்கு ஏற்கனவே கடன் சுமை உள்ள நிலையில், தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமா என கேள்வி எழுப்பிய அவர், நிதிநிலை சீரான பின்னர் போக்குவரத்து நெரிசல் இல்லாத, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் கட்டலாம் என தெரிவித்தார். குறிப்பாக பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்கள், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் இருப்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்தும் பேசிய அவர், சோதனைகளில் எதுவும் கிடைக்காது என தெரிவித்தார். மேலும், கடந்த கால அரசியல் விவகாரங்களை மீண்டும் பேசுவதால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த இடைத்தேர்தல்களில் பாமக விரைவில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்கள் தொடர்பாகவும் விமர்சனம் முன்வைத்த அவர், இடைத்தேர்தலில் மக்கள் தங்கள் முடிவை வெளிப்படுத்துவார்கள் என தெரிவித்தார்.