மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை! தப்பி தவறி கூட இந்த தவறுகளை செய்யாதீங்க.... அதிர்ஷ்டமும், செல்வமும் வீட்டை விட்டு விலகும்!!!



friday-lakshmi-worship-avoid-these-things

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. இந்த நாளில் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, விளக்கேற்றி வழிபடுவது செல்வம் மற்றும் மங்களம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் சில செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆன்மிக மரபுகள் கூறுகின்றன. அன்றைய தினம் மறந்தும் செய்யக்கூடாது என்று சொல்லப்படும் சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமையில் பணம் கடன் கொடுக்கக் கூடாது 

வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கடனாக கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. சிறிய தொகையாக இருந்தாலும், இந்த நாளில் பணத்தை கடனாக கொடுத்தால் மகாலட்சுமி வீட்டை விட்டு விலகுவதாக ஐதீகம் கூறுகிறது. அதேபோல், பச்சரிசியை வறுப்பது, புடைப்பது போன்ற செயல்களையும் வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது எனக் கூறப்படுகிறது. பச்சரிசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை கவனமாக கையாள வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.

பால், தயிர் உள்ளிட்டவற்றை இரவில் கடன் வாங்க வேண்டாம்

எல்லா நாட்களிலும் இரவு நேரத்தில் பால், தயிர் மற்றும் பச்சைக் காய்கறிகளை கடன் வாங்குவது அல்லது மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் விளக்கேற்றிய பிறகு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு தலை வாருவது, பேன் பார்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என ஆன்மிக மரபுகள் அறிவுறுத்துகின்றன. தலைக்கு குளித்துவிட்டு தலைமுடியை காய வைக்கும் பெண்கள், அதற்கென நேரம் ஒதுக்கி முடியை ஒழுங்குபடுத்திக் கொண்ட பிறகு மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விளக்கேற்றிய பிறகு தவிர்க்க வேண்டிய செயல்கள்

வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றிய பிறகு வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வீசக்கூடாது என்பது மற்றொரு நம்பிக்கை. வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை அல்லது மாலை நேரங்களில் விளக்கேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் நகம் மற்றும் முடி வெட்டுவதைத் தவிர்ப்பது நல்லது என பாரம்பரிய வழக்கங்கள் தெரிவிக்கின்றன.

பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், துண்டைக் கட்டிக்கொண்டோ அல்லது ஈர ஆடைகளுடனோ இறைவனை வழிபடக்கூடாது என்றும் கூறப்படுகிறது. பூஜைக்கு உடைக்கும் தேங்காய் எதிர்பாராத விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால், அதை இறைவனுக்கு படைக்கக்கூடாது என்ற நம்பிக்கையும் உள்ளது.

இயற்கையான பூக்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்துவதையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும் என ஆன்மிக வழக்கங்கள் வலியுறுத்துகின்றன. இவை அனைத்தும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் சொல்லப்படும் வழக்கங்களாகும்.