ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பை எப்போது அறிவிப்பார்கள்?
ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பை எப்போது அறிவிப்பார்கள்?

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களின் அமைச்சர்களும், நிபுணர்களும் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க கருத்தொற்றுமை ஏற்பட்டு இருப்பது பற்றியும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் விளைவுகளை அறிய அடுத்த 3 வாரங்கள் முக்கியமானவை என்றும் மோடி தெரிவித்தார்.
எனவே ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும், மாவட்டங்களில் நிலவும் பாதிப்புகளுக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு 14-ந் தேதிக்கு முன்பு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.