கொரோனா பாதித்தோருக்கு உதவுவதாக கூறி பாவமாக பேசி வெளியிட்ட வீடியோ! நிதியுதவியாக வந்த 3 கோடியை சுருட்டிய இளைஞர்கள்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனாவிற்காக அரசியல் பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளித்துவந்தனர். இந்தநிலையில் ஆந்திர மாநிலம் பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக இளைஞர் ஒருவர் பேசியிருந்தார். அந்த வீடியோவில் இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை எடுத்து வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய பலர், வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு நிதியுதவியை அனுப்பிவைத்துள்ளனர். தொழிலதிபர் ஒருவர் மட்டுமே 45 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதேபோன்று 5 நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்த அந்த கும்பல் தங்களின் நன்கொடை பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என விசாரிக்க சென்றவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.