கர்நாடக தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடியுடன் வந்த ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு..!!

கர்நாடக தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடியுடன் வந்த ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு..!!


security-helicopter-accompanying-prime-minister-modi-go

பிரதமர் மோடியுடன் வந்த பாதுகாப்பு ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி அங்கே முகாமிட்டுள்ளார்.

இதற்கிடையே நேற்று சித்ரதுர்கா, விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை,ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். பின்னர் பிரதமர் மோடி ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றார்.

சிந்தனூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு, பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அவரது ஹெலிகாப்டருடன் 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு வீரர்கள் வந்தனர். அதில் ஒரு ஹெலிகாப்டர் சேற்றில் புதைந்தது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்து வந்ததால், தரைப்பகுதி ஈரப்பதமாக இருந்தது என்றும் அதன் காரணமாகவே ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரை சுற்றி இருந்த சேற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சேற்றில் சிக்கிய ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.