பிரதமர் மோடி பேச்சி; தொழில்நுட்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள்...!Rulers who are not interested in technology

புதுடில்லி: கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் தொழில்நுட்பத்தில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாததால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்கூறியுள்ளார்.

டில்லியில், ஆளில்லா விமானங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியதாவது: ஆளில்லா விமானங்களின் தொழில்நுட்பத்தில், இந்தியா முழுவதும் காணப்படும் உற்சாகம் ஆச்சர்யமாக உள்ளது. இது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையின் சாத்தியகூறுகளை காட்டுகிறது. 

அரசு திட்டங்களை கடைசி வரைக்கும் கொண்டு சேர்ப்பதற்கு தொழில்நுட்பம் வழி வகுத்துள்ளது. விவசாயம், விளையாட்டு, பாதுகாப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மையில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரிக்கும். 

நாடு முழுவதும் நடக்கும் வளர்ச்சி பணிகளை குறித்து, ஆளில்லா விமானங்களின் உதவியுடன் அதிகாரிகளுடன் ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

8 ஆண்டுகளுக்கு முன் நல்லாட்சிக்கான புதிய தாரக மந்திரத்தை செயல்படுத்த துவங்கினோம். குறைந்தபட்ச அரசு மற்றும் அதிக நிர்வாகம் என்ற பாதையில் நடந்து எளிதாக வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

கடந்த 2014க்கு முன்பு, தொழில்நுட்பமானது பிரச்னைக்கான பகுதியாக கருதப்பட்டதுடன், ஏழைகளுக்கு எதிரானது என முத்திரை குத்தப்பட்டது. இதனால், 2014ல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அக்கரையற்ற சூழல் காணப்பட்டது. 

இதனால், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசினார்.