இந்தியா

ஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..

Summary:

வீட்டில் பூஜை செய்து, பெற்ற இரண்டு மகள்களை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீட்டில் பூஜை செய்து, பெற்ற இரண்டு மகள்களை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு, இவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு அலேக்யா (27) மற்றும் சாய் திவ்யா (22) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். அலேக்யா போபாலில் உள்ள Indian Institute of Forest Management நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு  படிக்கும் வகையில் பணியை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வந்து தங்கியுள்ளார்.

அதேபோல் மற்றொரு மகள் சாய் திவ்யா ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரும் கொரோனா காலம் என்பதால் கல்லூரிக்கு செல்லாமல் தங்கள் பெற்றோருடன் வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் பத்மஜாவுக்கு வலிப்புநோய் இருந்ததாகவும், மகள்களை நரபலி கொடுத்து பூஜை செய்தால் வலிப்புநோய் குணமாகும் எனவும், இதனால் கூடுதல் ஆயுள் கிடைக்கும் என்றும், பூஜையின் பலனாக நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் எனவும் கர்நாடகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியதாக தெரிகிறது.

எப்போதும் பூஜை, வழிபாடு என இருக்கும் புருஷோத்தம் மற்றும் அவரது மனைவி பத்மஜா இருவரும் இதனை நம்பி கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் மகள்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, முதலில் அலெக்கியா, பின்னர் சாய் திவ்யா என இருவரையும் அடித்து கொலை செய்து பூஜை செய்துள்ளனர்.

அதன்பிறகு புருஷோத்தம் தனது நண்பர் ராஜூ என்பவரை போனில் தொடர்புகொண்டு, தனது மனைவி தனது இரண்டு மகள்களையும் அடித்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அவர், அவர்கள் வீட்டிற்கு சென்றபோது தம்பதியினர் அவரை வீட்டிற்குள் விடவில்லை. இதனால் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் ராஜு.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து இளம் பெண்கள் இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர். இருவரும் கொலை செய்யப்பட்டு சிவப்பு வண்ண துணியில் சுத்தப்பட்டு வேறு வேறு அறையில் இருந்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆதாரமாக்கொண்டு போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த குடும்பத்தினர் குறித்து அக்கம் பக்கத்தினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

ஞயிற்றுக்கிழமை இரவு வந்துவிட்டாலே இந்த தம்பதியினர் மிகவும் உக்கிரமாக இருப்பார்கள் எனவும், அவர்கள் வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும் எனவும் கூறுகின்றனர். அதேபோல் கொலை செய்யப்படுவதற்கு சில நாள் முன்பு சாய் திவ்யா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்னர், அலெக்கியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "சிவா வருகிறார்... வொர்க் இஸ் டன்" என்று சந்தேகத்துக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார் எனவும் போலீசார் கூறுகின்றனர்.


Advertisement