சாமி கும்பிட போன இடத்துல சாவு வந்துட்டே..! நவராத்திரி விழா பந்தலில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் நவராத்திரி விழாவின்போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்தான். கேராகத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடஹ்ரா கிராமத்தில் உள்ள துர்கா தேவி வழிபாட்டுப் பந்தலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விழாவின் முதல் நாள் மாலை ஆரத்தியின்போது நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இரும்புத் தூணில் பாய்ந்த மின்சாரம்
நவராத்திரி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பந்தலில், விளக்குகளுக்காகத் தற்காலிக மின்சார வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த வயர் பந்தலில் இருந்த இரும்புத் தூணின் மீது உரசியதால், தூணில் மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. மாலை நேர வழிபாட்டின்போது அங்கு நின்றிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்தத் தூணைப் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களுக்குள் பாதுகாப்பு ஆய்வு நடத்த உத்தரவு
சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ஜான்பூர் மாவட்ட ஆட்சியர் சாமுவேல் பால் என், மாவட்டம் முழுவதும் உள்ள துர்கா தேவி வழிபாட்டுப் பந்தல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீயணைப்புத் துறை மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாத பந்தல்களுக்கு கட்டுப்பாடு
முறையான தடையில்லாச் சான்றிதழ் மற்றும் தேவையான அனுமதிகள் இல்லாமல் எந்தப் பந்தலும் செயல்படக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உரிய நிதியுதவி வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விழாக்களின்போது தற்காலிக மின்சார இணைப்புகள் அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.