எவரெஸ்ட் பனிப்பாறையை உருக்கும் மனித சிறுநீர்? அதிர்ச்சி ஆய்வு!



Everest snow slide for urine

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் பகுதியில், மலையேற்ற வீரர்களின் மனித நடவடிக்கைகளும் பனிப்பாறை உருகுவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எவரெஸ்ட் அடிவார முகாமில் இருந்து வெளியேற்றப்படும் மனித சிறுநீரின் வெப்பமும், சமையல் மற்றும் வெப்பமூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் வெப்பமும் கும்பு பனிப்பாறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வு Regional Environmental Change என்ற அறிவியல் இதழில் 2026 ஜூலையில் வெளியிடப்பட்டது. எவரெஸ்ட் பேஸ் கேம்பில் ஏராளமான மலையேற்ற வீரர்கள், வழிகாட்டிகள் மற்றும் பணியாளர்கள் தங்குகின்றனர். அதிக உயரத்தில் நீரிழப்பைத் தவிர்க்க அதிக அளவு தண்ணீர் அருந்துவதால், அங்கு தினசரி சுமார் 6,000 லிட்டர் சிறுநீர் உருவாகிறது என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதில், கணிசமான பகுதி பனிப்பாறை மீது வெளியேற்றப்படுவதாகவும், மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் வெப்பம் சுற்றியுள்ள பனிக்கு வெப்ப ஆற்றலை வழங்குவதாகவும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். 2023-ம் ஆண்டு 50 நாட்கள் நடைபெற்ற மலையேற்ற சீசனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், முகாமில் பயன்படுத்தப்பட்ட LPG, மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் மனித சிறுநீரால் உருவாகும் வெப்ப ஆற்றலை கணக்கிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: குப்பை மேடாக கிடந்த நதி... தனி ஒருவனாக சுத்தம் செய்த 20 வயது இளைஞர்!

Snow slide

இந்த ஒட்டுமொத்த வெப்ப ஆற்றல் கோட்பாட்டளவில் சுமார் 2,492 டன் பனி மற்றும் பனிப்பாறையை உருக்கும் அளவுக்கு சமமானது என ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இதில் மனித சிறுநீரின் வெப்பத்தால் மட்டும் சுமார் 154 டன் பனியை உருக்கும் அளவுக்கு வெப்ப ஆற்றல் உருவாகியிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும், “மனித சிறுநீரால் 154 டன் பனிப்பாறை நேரடியாக உருகிவிட்டது” என்று இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை. இது வெப்ப ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு மட்டுமே. மேலும், எரிபொருள் பயன்பாட்டின் வெப்ப தாக்கமே சிறுநீரைவிட மிகப்பெரியதாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கும்பு பனிப்பாறை உருகுவதற்கு உலகளாவிய காலநிலை மாற்றம்தான் பிரதான காரணம் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

எவரெஸ்ட் பேஸ் கேம்பில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கழிவுநீர் மேலாண்மை, எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய பேஸ் கேம்பை பனிப்பாறை இல்லாத, நிலையான பகுதிக்கு மாற்றுவது குறித்தும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கடன் தொகையை கேட்டு பெண்ணை கடத்தி தாக்குதல்! ஆடைகளை அகற்றி வீடியோ.. பெங்களூருவில் அதிர்ச்சி!