கடன் தொகையை கேட்டு பெண்ணை கடத்தி தாக்குதல்! ஆடைகளை அகற்றி வீடியோ.. பெங்களூருவில் அதிர்ச்சி!



Nude atack Loan issue in karnataka

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடன் தொகை மற்றும் வட்டி பணத்தை திருப்பிச் செலுத்தாததாக கூறி 30 வயது பெண்ணை கடத்தி அடைத்து வைத்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் ஆடைகளை அகற்றி வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, அந்த பெண் இருவரிடம் தனித்தனியாக பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஒருவரிடம் ரூ.1 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.50 ஆயிரமும் பெற்றிருந்ததாகவும், சில காலம் தவணை மற்றும் வட்டி தொகையை செலுத்தி வந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக பணம் செலுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதாக தெரிகிறது.

karnataka

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை நஸ்ரத் என்பவர் தனது வீட்டுக்கு அழைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு ரேஷ்மா பானு, அவரது கணவர் சுஹைல் உள்ளிட்டோர் இருந்ததாகவும், அனைவரும் சேர்ந்து பெண்ணை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவரையும் அவரது குழந்தையையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று கும்பல்கோடு அருகே உள்ள வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கணவருடன் மற்றொரு பெண்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்! 

அங்கு பெண்ணை தாக்கியதுடன், கடன் மற்றும் வட்டி தொகையை செலுத்துமாறு வற்புறுத்தியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோம் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கட்டத்தில் பெண்ணின் ஆடைகளை அகற்றி வீடியோ பதிவு செய்ததாகவும், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

karnataka

இதற்கிடையே, பெண்ணை காணவில்லை என அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய சாந்திரா லேஅவுட் போலீசார், கும்பல்கோடு அருகே உள்ள வீட்டில் பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை மீட்டனர். இந்த வழக்கில் நஸ்ரத், ரேஷ்மா பானு மற்றும் சுஹைல் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சைஃப் என்பவர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், தாக்குதல், மிரட்டல் மற்றும் தனியுரிமையை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் வசூல் என்ற பெயரில் பெண்ணை கடத்தி தாக்கி, அவமானப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டியதாக வெளியாகியுள்ள இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!