ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை சம்பவத்தில் அதிரடி திருப்பம்.! 13 நபர்களை கைது செய்த போலீசார்.!



9 people suicide case

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர் வான்மோர் என்பவரின் வீடு இரண்டு தினங்களுக்கு முன்பு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அககம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த வீட்டில் 9 பேர் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து இறந்து கிடந்தவர்கள் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவர் வான்மோர் மற்றும் அவரது சகோதரர் மாணிக் வான்மோர் பலரிடம் கடன் வாங்கியிருந்தனர். இருவரும் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் அவர்களது தாயாருடன் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடன் வாங்கியவர்களிடம் குறித்த காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து மோசமாக திட்டி அவமானப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இரு சகோதரர்கள் அவர்களின் மனைவியர் நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் ஆகிய 9 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சகோதரர்கள் இருவருக்கும் கடன் கொடுத்த 25 பேரில் 13 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 12 பேரை தேடி வருகின்றனர்.