நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை: இதில் இன்னும் வேறென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை: இதில் இன்னும் வேறென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!


Vallarai spinach is a powerful memory booster

மூளைக்கு நல்ல நினைவாற்றலை தரும் வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை கீரை என்ற பெயர் பெற்றது.

மருத்துவ மூலிகை பொருள்களில் ஒன்று வல்லாரை கீரை. வல்லாரை கிடைப்பதற்கு அரிதான பொருள் அல்ல. எளிதில் கிடைக்க கூடிய கீரைதான். இப்போது கீரை விற்பவர்களிடமே வல்லாரை எளிதாக கிடைக்கிறது. வீட்டிலும் வல்லாரையை வளர்க்கலாம்.

வெரிகோஸ் வெயின் எனப்படும் கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கு இந்த வல்லாரை கீரை மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரை கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. இதன் காரணமாகவே வல்லாரை கீரை நினவாற்றலை கொடுக்கும் வல்லமையை பெற்றுள்ளது.

மூளை நரம்புகள் சீராக இருந்தாலே எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். வல்லாரை கீரை அத்தகைய வலிமையை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதனால் தான் வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே என்ற முதுமொழி உருவானது.

வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக்  கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும். வயிற்றுப்புண் வாய்ப்புண்ணுக்கும் வல்லாரை உண்பது நல்ல தீர்வை அளிக்கும். மணத்தக்காளி கீரை போன்று வல்லாரை கீரையும் புண்ணை ஆற்றும் அருமருந்தாகும்.

வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து சாந்து போன்று  அரைத்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில்  கலந்து உண்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

வல்லாரை கீரையை நிழலில் உலர்த்தி அதனை பொடியாக்கி, அந்த பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும். கண் எரிச்சல், கண்களில்  நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கும்.