சினிமா

ஜெய்பீம் பட பிரச்னை.! நடிகர் சூர்யா வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்.!

Summary:

ஜெய்பீம் பட பிரச்னை.! நடிகர் சூர்யா வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்.!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. பழங்குடி பெண்ணிற்கு நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படம் வெளியான நாள் முதல் நடிகர்களின் நடிப்பு, கதைக் கரு குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 

இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறினர். கதையில் வரும் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரை அந்தோணி சாமி என்றில்லாமல் குருசாமி என மாற்றியதும், ஒரு காட்சியில் அந்த அதிகாரியின் வீட்டின் நாட்காட்டியில் குறிப்பிட்ட சாதி அடையாளத்தோடு கூடிய படம் இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில்,  சென்னை தி நகர் ஆற்காடு தெருவில்  உள்ள சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சில தரப்பினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Advertisement