இணையத்தைப் பார்த்து விபரீத பிரசவ முயற்சி; கற்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!

Summary:

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் பனியன் நிறுவன ஊழியர் கார்த்திகேயன். இவரின் மனைவி கிருத்திகா அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்கள் இயற்கை மருத்துவத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள். 

இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார். அப்போது கார்த்திகேயனின் நண்பரான பிரவீன் மற்றும் அவரின் மனைவி லாவண்யா ஆகியோர் தங்களது பெண் குழந்தையை வீட்டிலேயே இயற்கையான முறையில் பிரசவம் பார்த்துப் பெற்றெடுத்த கதையை அவர்களிடம் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த 22 -ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் - லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் - லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதில் கிருத்திகாவுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், கிருத்திகாவின் வயிற்றில் இருந்து நஞ்சுக்கொடி வெளியே வராமல்போனதால், அடுத்த சில நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு,
திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துபோனார்.


Advertisement