77 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானம் இமய மலையில் கண்டுபிடிப்பு.!!

77 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானம் இமய மலையில் கண்டுபிடிப்பு.!!



aircraft found in himalayas after 77 years

இரண்டாம் உலக போரின் போது காணாமல் போன விமானம் ஒன்று, 77 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இமய மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. C-46 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போக்குவரத்து விமானம் 1945 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு மலைப் பகுதியில் புயல் காலநிலையில் காணாமல் போனது. 

இந்த விமானம்  தெற்கு சீனாவின் குன்மிங்கிலிருந்து 13 பேரை ஏற்றிச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் மாயமானது. மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது. இதை தேடும் பணி நடைபெற்ற நலையில் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் இறங்கினார். விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸிடம் ஒப்படைத்திருந்தார். இந்தநிலையில் தனது குழுவினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில், பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு  கண்டுபிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி மூடிய பகுதியில் கிடந்த விமான வால்பகுதியில் இருந்த  குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.