பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மம்... ஆபத்தான "பிளாக் ஹோல்"! தொட்டால் வெளியே வர முடியாது... விஞ்ஞானிகள் எடுக்கப்போகும் பெரிய ரிஸ்க்..!!!
பிரபஞ்சத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிளாக் ஹோல் குறித்து புதிய ஆய்வை மேற்கொள்ள சர்வதேச வானியல் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் ஈர்ப்பு எல்லைக்கு மிக அருகில் சிறிய விண்கலத்தை அனுப்பி தரவுகளைச் சேகரிக்கும் இந்த முயற்சி, விண்வெளி ஆய்வில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை மீண்டும் சோதிக்கும் முயற்சி
சீனாவின் புடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் இயற்பியலாளர் கோசிமோ பாம்பி மற்றும் அவரது ஆய்வுக் குழு, பிளாக் ஹோலின் 'இவென்ட் ஹொரைசன்' எனப்படும் ஈர்ப்பு எல்லைக்கு மிக அருகில் விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டை மேலும் துல்லியமாக சோதிப்பதுடன், விண்வெளி-கால அமைப்பு மற்றும் ஈர்ப்பு விசையின் தன்மையைப் பற்றிய புதிய தகவல்களைப் பெற முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: இன்பச் செய்தி! இனி ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம்..! மத்திய அரசின் புதிய ரேஷன் மாற்றுத் திட்டம்!
லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கும் நானோகிராஃப்ட்
பிளாக் ஹோலின் ஈர்ப்பு எல்லையைத் தாண்டிய பிறகு எந்த விண்கலமும் மீண்டும் வெளியே வர முடியாது என்பதால், அதன் எல்லையைத் தொடாமல் மிக அருகில் சென்று ஆய்வுத் தரவுகளைப் பதிவு செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோல்களை வழக்கமான ராக்கெட்டுகள் மூலம் அடைவது சவாலாக இருப்பதால், லேசர் கற்றைகளால் இயக்கப்படும் 'நானோகிராஃப்ட்' எனப்படும் மிக இலகுரக விண்கலங்களை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு புதிய வாய்ப்பு
பூமிக்கு ஒப்பீட்டளவில் அருகில் உள்ள நானோகிராஃப்ட் மூலம் ஆய்வு செய்யக்கூடிய பிளாக் ஹோல்கள் எதிர்காலத்தில் கண்டறியப்பட்டால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிரபஞ்சத்தின் மிகப் புதிரான பகுதிகளைப் பற்றிய மனிதகுலத்தின் புரிதல் மேலும் விரிவடையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... 287 கோடி ரூபாய்க்கு சாதனை படைத்த 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு! அதிர்ந்துப்போன ஆய்வாளர்கள்..!!!