கர்ப்பிணி மருமகளை உயிருடன் கொளுத்திவிட்டு கொலை செய்த மாமியார்.. விருதுநகரில் பேரதிர்ச்சி.!



Virudhunagar Daughter In Law Murder by Mother In Law

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வில்லிபத்திரி கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்தீஸ்வரி (வயது 20). சிவகாசி எஸ்.என் புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஜோதிமணிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கார்த்தீஸ்வரியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

ஜோதிமணி சுக்கிரவார்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் தாய் சின்னதாய். தற்போது கார்த்தீஸ்வரி கர்ப்பமாக இருக்கும் நிலையில், மாமியார் - மருமகள் இடையே அவ்வப்போது குடும்பச்சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி கார்த்தீஸ்வரி பலத்த தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

Virudhunagar

அதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கார்த்தீஸ்வரி அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின் போதே, கார்த்தீஸ்வரி சிவகாசி நீதிபதியிடம் மரண வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். கார்த்தீஸ்வரியின் மாமியார் சின்னதாய், தனது மருமகளை கர்ப்பிணி என்றும் பாராது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது அம்பலமானது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் காவல் துறையினர், சின்னத்தாயை கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தீஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, அவரது மாமியார் மீது காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.