திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்.. டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்து.. கதறும் குடும்பத்தினர்..!
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்.. டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்து.. கதறும் குடும்பத்தினர்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெற இருந்த உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 25 பேர் ஒரு வேனில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது அந்த வேனானது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் பின் சக்கர டயர் வெடித்தது. இதில் அந்த வேன் தாறுமாறாக ஓடி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுராந்தகம் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 25 பேரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுபிதா, கோகுல், அஜித் குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.