பச்சரிசியை வச்சுக்கிட்டு புழுங்கல் அரிசியை தாருங்கள்..! மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை.!
பச்சரிசியை வச்சுக்கிட்டு புழுங்கல் அரிசியை தாருங்கள்..! மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை.!

தமிழகத்தில் புழுங்கலரிசி பயன்பாடு அதிகம் இருப்பதால், தமிழக அரசிடம் கையிருப்பில் உள்ள பச்சரிசியில் ஒரு பகுதிக்கு பதிலாக புழுங்கலரிசி ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் அரிசி பயன்பாட்டில் புழுங்கல் அரிசியின் பயன்பாடு என்பது 80 சதவீதமாகவும், பச்சரிசியின் பயன்பாடு 20 சதவீதமாகவும் உள்ளது. இந்த 20 சதவீதத்தில் பெரும்பான்மையான பச்சரிசி பயன்பாடு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளது.
இந்தநிலையில், தற்போது தமிழக அரசின் கிட்டங்கிகளில் அதிகப்படியாக இருக்கும் பச்சரிசியை இந்திய உணவுக்கழக கிட்டங்கிக்கு அனுப்பி, அதற்கு பதிலாக புழுங்கல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய பொதுவினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தமிழக அரசின் டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட இணைச்செயலாளர் சுபோத்குமார் சிங்கை சந்தித்து, இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட துறை இணைச் செயலாளர் உறுதியளித்தார்.