தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என வெளியான தகவல் உண்மையா?? செக் வைத்த மத்திய அரசு!

தமிழகம் இரண்டாக பிரியப்போவதாக எழுந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்து அதனை தனி மாநிலமாக உருவாக்க மத்திய அரசு பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
அதேநேரம் இந்த தகவலின் உண்மை நிலை குறித்தும் எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று கேள்வி எழுந்தது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் இது சம்பந்தமாக மக்களவையில் கேள்வி ஒன்றை எழுத்துப்பூர்வமாக எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அவர்கள், தமிழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து எந்த ஒரு கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். இதனால் தமிழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பான பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.