திடீரென பரவிய கரும்புகை: 2 பெண்கள் பரிதாப பலி, ஒருவர் மீட்பு!.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

திடீரென பரவிய கரும்புகை: 2 பெண்கள் பரிதாப பலி, ஒருவர் மீட்பு!.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!


Sudden spread of black smoke, 2 women tragically died, one rescued

சென்னை, அசோக் நகர் பகுதியில் உள்ள 12 வது அவென்யூவை சேர்ந்தவர் ஜெயா (70). இவரது தாயார் ஜானகி (92). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தனர். ஜானகிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்து கொள்ள போரூரை சேர்ந்த ஜெயப்பிரியா (27) என்பவரை ஜெயா நியமித்து இருந்தார். அவரும் இவர்களுடனே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் தாயார் ஜானகி மற்றும் ஜெயா ஆகியோர் படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தனர். ஜெயப்பிரியா வீட்டின் ஹாலில் படுத்திருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் அவர்களது வீட்டில் திடீரென கரும்புகை பரவியது. இதனைத் தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. வீடு முழுவதும் புகை பரவியதால் உள்ளே சிக்கிக்கொண்ட 3 பேரும் கூச்சலிட்டனர்.

இதற்கிடையே இவர்களது அலறல் சத்தம் கேட்ட அதே அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் வசித்து வந்த குடும்பத்தினர்கள் குடியிருப்புக்கு வெளியே திரண்டனர். குடியிருப்பு முழுவதும் கரும்புகையால் சூழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அசோக் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயன்றனர்.

குடியிருப்பின் முன்புறத்தில் புகை அதிகளவில் பரவி இருந்ததால், வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சமையல் அறையில் எரிந்த தீயை முதலில் அணைத்தனர். இதையடுத்து வீட்டில் உள்ள அறைகளை சோதனையிட்ட போது மயக்கமடைந்த நிலையில் ஜானகி இருப்பதை கண்ட தீயணைப்பு வீரர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வீட்டின் உள்ளே மேலும் 2 பேர் இருப்பதாக அக்கம்பக்கத்தோர் கூறியுள்ளனர். இதன் காரணமாக தீயணைப்பு வீரர்கள் வீட்டின் முன்பகுதி வழியே மீண்டும் வீட்டினுள் சென்றனர். 2 அங்கு ஹாலின் ஒரு பகுதியில் ஜெயப்பிரியா இருப்பதை கண்டு, அவரை மீட்டு பத்திரமாக வெளியேற்றினர். வீட்டின் படுக்கை அறையில் ஜெயா மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி ஜானகியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.