மினி லாரியில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் விபத்தில் படுகாயம்: மலைவாழ் மக்கள் சாலை மறியல்..!

மினி லாரியில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் விபத்தில் படுகாயம்: மலைவாழ் மக்கள் சாலை மறியல்..!Schoolgirls who went to school in a mini truck were injured in the accident

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகேயுள்ள பைல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட  கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (16). மேல்பூசணி குழிப்பட்டி கிராமத்தை  சேர்ந்தவர் ரூபிகா (16). இவர்கள்  இருவரும் முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் வழக்கமாக கொல்லிமலையில் இருந்து ராசிபுரத்துக்கு செல்லும் அரசு பேருந்தில் தங்கள் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த அரசு பேருந்தை தவற விட்ட  இருவரும், கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சி நோக்கி காய்கறிகளை ஏற்றி சென்ற மினி லாரியின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர். இந்த மினி லாரி மேல் பூசணி குழிப்பட்டி பஸ் நிறுத்தத்தை அடுத்த வளைவில் திரும்பிய போது அதில் அமர்ந்திருந்த அகிலாவும், ரூபிகாவும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் திரண்ட மலைவாழ், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கொல்லிமலை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மலைவாழ் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பள்ளிக்கு மினி லாரியில் சென்ற மாணவிகள் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.