தமிழகம்

கள்ளக்காதலனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. இராணிப்பேட்டையில் பரபரப்பு.!

Summary:

கள்ளக்காதலனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. இராணிப்பேட்டையில் பரபரப்பு.!

சோளிங்கர் அடுத்த பானவரத்தில் தனது விருப்பத்திற்கு இணங்காத பெண்ணை, கள்ளக்காதலன் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை அடுத்த பானவரத்தில் உள்ள மலைமேடு பைரவா காலனியில் தனது குழந்தைகளுடன் ரவிக்குமார் - காமாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், காமாட்சி கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்திய காயங்களுடன் அலறி உள்ளார். 

காமாட்சி அலறிய சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து அவரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலமாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த பானவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காமாட்சி அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், இந்தத் தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பிரித்து வைத்துள்ளனர். இந்த நிலையில், ஜெயபிரகாஷ், காமாட்சியின் கணவர் வேலைக்கு சென்ற பின் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த காமாட்சியுடன் பேசியுள்ளார். தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இருப்பினும், இதற்கு காமாட்சி ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் காய்கறி நறுக்குவதற்காக வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சியின் வயிற்று பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறிக் கொண்டு பெண்மணி அங்கிருந்து வெளியே வர முயன்றுள்ளார். 

அப்போது, வெளியில் சென்றால் ஒருவேளை நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ? என எண்ணி ஜெயபிரகாஷ் அவரது கழுத்துப் பகுதியையும் காயப்படுத்தியுள்ளார். இதனால் காமாட்சிக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு சத்தமாக அலறியதால், அவர் பயந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து காமாட்சியை கொலை செய்ய முயன்றதற்காக காவல்துறையினர் ஜெயப்பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement