அலுவலகத்தில் கையில் மது பாட்டிலோடு இருந்த பி.டி. ஓ.. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை.!

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் பால்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சங்கர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் மறுபடியும் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பணி மாறுதலாகி வந்துள்ளார்.
அதன் பின் வழக்கம் போல குடிபோதையில் பணிக்கு வர தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் அலுவலகத்திலேயே சங்கர் மது அருந்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதற்கிடையில் இவரது குடிப்பழக்கத்தை பயன்படுத்தி சில ஒப்பந்ததாரர்கள் காசோலை பெறுவதற்கு மது வாங்கி கொடுத்து காரியம் சாதிக்கிறார்கள் என்ற புகாரும் வந்துள்ளது.
இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த ஒப்பந்ததாரர் ஒருவர் பி.டி.ஓ. சங்கருக்கு வழக்கம்போல் மது வாங்கி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தனது இருக்கையில் கையில் மது பாட்டிலுடன் பி.டி.ஓ. சங்கர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. மேலும் இந்த புகப்படம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே பல புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பி.டி.ஓ.சங்கர் இப்போது அலுவலகத்தில் கையில் மது பாட்டில் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து கலெக்டர் சாந்தி பி.டி.ஓ. சங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதோடு தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.