தமிழகம்

கொரோனா அச்சுறுத்தல்! பூட்டிய வீட்டில் 15 மணி நேரம் கிடந்த 30வயது பெண்ணின் சடலம்! பின் நடந்த பரபரப்பு சம்பவம்!

Summary:

Officers and people hesitated to take Girl deadbody

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் 30 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்புவரை சென்னையில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த மார்ச் மாதம்தான்  சொந்த ஊரான மத்தூருக்கு வந்து, வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.  ஆனால் அவருக்கு உறவினர்களுடன் எந்த தொடர்பும் இல்லாததால் தனியாகவே கஷ்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸுடன் அங்கு விரைந்த மருத்துவ ஊழியர்கள் வீட்டின் உள்ளே சென்று மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என கண்டறிய சளி, ரத்த மாதிரிகளை சோதனைக்காக  எடுத்து சென்றனர். 

பின்னர் அவரை அடக்கம் செய்ய அப்பகுதி மக்களிடம் கூறிய நிலையில் கொரோனாவால் இறந்திருப்பாரோ?  என்ற அச்சுறுத்தலால் அவர்கள் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில்  அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும், வருவாய்த்துறைக்கும், காவல் துறைக்கும், ஊராட்சி மன்றத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொரோனா பீதியால் அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய தயங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை பெண்ணின் உடல் அடக்கம் செய்ய முடியாமல் வீட்டிலேயே கிடந்துள்ளது. அதனை தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை மனிதநேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், முழு கவச உடைஅணிந்து அந்த பெண்ணின் உடலை சுடுகாடு வரை எடுத்து சென்று, அடக்கம் செய்தனர். இதனால் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Advertisement