தமிழகம் இந்தியா

சென்னை விமான நிலையத்திற்கு வந்தவரின் பெட்டியை சோதித்தபோது காத்திருந்த அதிர்ச்சி..! 13 அரியவகை உயிரினங்கள் பறிமுதல்..!

Summary:

Mysteries animals rescued in Chennai airport

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவக்கூடிய கொரோனா வைரஸ் பீதி ஒருபக்கம் இருக்கும் நேரத்தில், வெளிநாட்டு நோய் கிருமிகள் நம் நாட்டில் பரவ வாய்ப்புள்ள விதத்தில் விமானத்தில் வந்த ஒருவர் கடத்திவந்த 13 அபூா்வவகை உயிரினங்களை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சோ்ந்த இப்ராகீம் ஷா(38) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து சோதனை செய்தனர். அதில், அவர்கொண்டுவந்த டிராலி சூட்கேசுக்குள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொடிய விஷமுடைய சிலந்திகள், தவளை, மரப்பல்லி, கீரிப்பிள்ளைகள், பச்சோந்தி, பாலைவனத்தில் வசிக்கக்கூடிய காட்டு எலிகள் உள்ளிட்ட 13 அபூா்வவகை உயிரினங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுபோன்ற அரியவகை உயிரினங்களால் வெளிநாட்டில் இருக்கக்கூடிய நோய் கிருமிகள் நம் நாட்டிலும் பரவ கூடும் என்பதால், இந்த உயிரினங்களை மீண்டும் தாய்லாந்துக்கே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவை உயிரினங்களை கடத்தி வந்தவரிடமே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட இப்ராகீம் ஷா சென்னையில் உள்ள மத்திய வனக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.


Advertisement