அரசியல் தமிழகம்

ஆன்லைன் பாடம் படிப்பதற்கு செல்போன் இல்லாத ஏழை விவசாயியின் மகள் தற்கொலை! வருத்தம் தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

Summary:

mk stalin talk about student suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பனிரெண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆறுமுகத்தின் மூன்று மகள்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாக பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏழை விவசாயியான ஆறுமுகம் ரூபாய் 20 ஆயிரம் செலவில் ஒரு செல்போன் வாங்கி 3 மகள்களும் ஒரே செல்போனில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். 


ஆனால் சகோதரிகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் வகுப்பு நடத்தப்படுவதால் ஒருவர் மட்டுமே ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயில முடிந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த நித்யஸ்ரீ கடந்த 29ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது  குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு போனுக்காக சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை! நெஞ்சு கனக்கிறது! அரசின் பொறுப்பின்மையால் வந்த வினை! பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில்,  தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக!" என பதிவிட்டுள்ளார்.


Advertisement