கணவன் மனைவி 2 பேரும் பார்க்கத்தான் இப்படி.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே..! பதறவைக்கும் நாமக்கல் சம்பவம்..

கணவன் மனைவி 2 பேரும் பார்க்கத்தான் இப்படி.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே..! பதறவைக்கும் நாமக்கல் சம்பவம்..


Man killed own brother over property issue near Namakkal

சொத்து தகாரில் சொந்த தம்பியை கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பியான பழனிவேல் (51), அண்ணாத்துரை (50). அண்ணன் பழனிவேலுக்கு திருமணம் முடிந்து பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதேபோல் தம்பி அண்ணாத்துரைக்கும் திருமணம் முடிந்து கனகவள்ளி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு குடும்பத்தினரும் ஒரே பகுதியில் வசித்துவரும் நிலையில், இவர்களுக்கு உள்ளூரில் சொந்தமாக இருக்கும் 12 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்துவருகின்றனர்.

12 ஏக்கர் நிலமும் பாகம் பிரிக்காமல் அண்ணன், தம்பி இரு குடும்பத்தினரும் கூட்டுப்பட்டாவாக விவசாயம் செய்துவரும் நிலையில், தம்பி குடும்பத்தினருக்கு தெரியாமல், பழனிவேல் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் அந்த நிலத்தின் பெயரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனும் பெற்றிருந்தார். சமீபத்தில் அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில் அந்த கடனும் தள்ளுபடி ஆகிவிட்டது. இந்த விவரம் ஏதும் அறியாமல் இருந்த தம்பி அண்ணாத்துரைக்கு சமீபத்தில் அனைத்து விஷயங்களும் தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், இதுகுறித்து தனது அண்ணன் மற்றும் அண்ணியிடம் கேட்டுள்ளார். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாற, அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இப்படியாக இந்த பிரச்சனை தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் வசித்துவரும் கிராமத்தில் கடந்த மார்ச் 24- ஆம் தேதியன்று மாரியம்மன் கோவில் திருவிழா நடந்துள்ளது. அன்று இரவு அண்ணாதுரை தோட்டத்தில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அண்ணன் பழனிவேலும், அவரது மனைவி பழனியம்மாளும் தோட்டத்திற்கு சென்று அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து அண்ணாதுரையை கட்டையால் தாக்க, அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பெரிய கல் ஒன்றை எடுத்து அண்ணாதுரையின் தலையில் போட்டு அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி, ஒன்றும் தெரியாததுபோல் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் நீண்ட நேரமாகியும் அண்ணாதுரை வீட்டிற்கு வராதநிலையில், தோட்டத்தில் சென்று பார்த்தபோது, அவர் முகம் சிதைந்து இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கிய போலீசார், அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததும், பழனிவேல் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் தலைமறைவானதும் தெரியவந்தது. உடனே தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் நாமக்கல்லில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த பழனியம்மாள், பழனிவேலு ஆகிய இருவரையும் மார்ச் 25- ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூட்டு பட்டாவில் இருக்கும் மொத்த நிலத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் அண்ணாத்துரையை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.