பல நகரங்களில் விரைவில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல் போகும்! வெளிவந்த தகவலால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல் போகும் என நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது எனவும், இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவலையும் நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து நிதிஆயோக் அமைப்பு ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மற்ற நகரங்களைவிட சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும், 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 ஈர நிலங்கள், 6 வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. மேலும், சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும், மழைப்பொழிவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு நம்பியுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால், மழைநீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும். நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய அரசும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.