அரசியல் தமிழகம்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு முக்கியத்துவம்.! காத்திருந்த சீனியர் அமைச்சர் ரகுபதி.! திடீர் முடிவால் அலுவலர்கள் அதிர்ச்சி.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் திருமயம் தொகுதியில் தி.மு.க-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் திருமயம் தொகுதியில் தி.மு.க-வின் எஸ்.ரகுபதி, ஆலங்குடி தொகுதியில் தி.மு.க-வின் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டைத் தொகுதியில் தி.மு.க-வின் வை.முத்துராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் தி.ராமச்சந்திரன், கந்தர்வக்கோட்டையில் தி.மு.க கூட்டணியில் எம்.சின்னதுரை ஆகியோர் வெற்றிபெற்றனர். விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். 

புதுக்கோட்டையில் தி.மு.க கூட்டணி 5 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக தி.மு.க ஆட்சியில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. திருமயம் எம்.எல்.ஏ எஸ்.ரகுபதிக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆலங்குடி எம்.எல்.ஏ சிவ.வீ. மெய்ய நாதனுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்தநிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்ட செவிலியர் பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விட்டார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் 10:45 மணி வரை வரவில்லை.

இதையடுத்து, அதிகாரிகளிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விழாவை துவங்கலாம் என கூறியுள்ளார். ஆனால் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வந்தபின் நிகழ்ச்சியை நடத்தலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உடனடியாக மேடையில் ஏறி, அதிகாரிகளின் விருப்பப்படி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வந்து, உங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவார். மக்கள் நலன் தான் முக்கியம் என்ற பாதையில், என் அரசியல் வாழ்க்கை சென்று கொண்டு உள்ளது. என்னால் யாருக்கும், எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று நினைக்கிறேன். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் என் தலைவர். அவர் தான் எனக்கு பொறுப்பை அளித்துள்ளார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் ஏற்படாது. என பேசி முடித்து, மேடையை விட்டு இறங்கிய அமைச்சர், நிகழ்ச்சியை புறக்கணித்து சென்று விட்டார்.

அதன்பின், தாமதமாக வந்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். இரு அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருந்து நடத்தப்பட்ட நிலையில், ஒரு அமைச்சரின் தாமதத்தால் மற்றொரு அமைச்சர் வெளியேறிய நிகழ்வு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement