தெரிந்துகொள்வோம்: காந்திஜெயந்தி தினத்தில் தான் மற்றொரு பெருந்தலைவருக்கு நினைவு தினம்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் இந்தியா

தெரிந்துகொள்வோம்: காந்திஜெயந்தி தினத்தில் தான் மற்றொரு பெருந்தலைவருக்கு நினைவு தினம்!

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்றும் மஹாத்மா காந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும்.  காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 18 வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடுடன் இருந்தவர் தான் காமராஜர். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், பெரிய அளவில் கல்வி பயிலாதவர். ஆனாலும், தனக்கே உரிய பட்டறிவாலும், அனுபவ ஞானத்தாலும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து அதன்படி நடந்தார். 

1937ம் ஆண்டு தனது 34வது வயதில் முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏவாக நுழைந்தார். 954ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் பின்னர் 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று  3 முறை தொடர்ந்து முதல்வராக நீடித்தார்.

அவரது ஆட்சி காலத்தில் ஏராளமான பள்ளிகளை திறந்துவைத்தார், மதிய உணவு திட்டத்தையும் அறிமுகம் செய்தார். அவரது தீவிரமான முயற்சியால் 7 சதவீதமாக இருந்த தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 37 சதவீதமாக அதிகரித்தது. அதனால் தான் 'கல்விக் கண் திறந்த காமராஜர்' என மக்கள் போற்றுகின்றனர்.

நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி  காந்தி பிறந்த தினத்தில் உயிரிழந்தார். காந்தி ஜெயந்தி அன்று தான் கல்வி கண் திறந்த காமராஜர் நினைவு தினம் என்பதை நினைவு கூறுகிறோம்.


Advertisement
TamilSpark Logo