மகளிர் தினத்தில் கொடூரம்.. மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர்.!



Husband Attacks Wife With Machete in Tirunelveli

அம்பாசமுத்திரத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகளிர் தினத்தன்று நிகழ்ந்த இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பொன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவா. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 32). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், முகுந்தன் என்ற 9 வயது மகனும், நிதிஷா என்ற 4 வயது மகளும் இருக்கின்றனர். தம்பதி அதே பகுதியில் உள்ள பூக்கடை பஜாரில் பூ கட்டும் வேலை செய்து வருகின்றனர். 

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு:

இதனிடையே கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, ஆத்திரமடைந்த இசக்கியம்மாள் சண்டையிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தையுடன் சென்றுவிட்டார். அதன் பின் சிவா மனைவியை அழைத்து வர முயற்சித்தும் இசக்கியம்மாள் பிடி கொடுக்கவில்லை. கணவனை பிரிந்து பல மாதங்களாகவே தனது தந்தை வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

tirunelveli

மனைவியை கொல்ல திட்டம்:

இந்த நிலையில் மனைவி மீது கோபத்தில் இருந்த சிவா மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று காலை ஹெல்மெட் அணிந்து மனைவியின் வீட்டருகே மறைந்திருந்தவர், இசக்கியம்மாள் வெளியே வந்ததும் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இசக்கியம்மாளை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தீவிர சிகிச்சைப்பிரிவில் மனைவி:

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், கணவர் சிவாவிற்கு வலை வீசப்பட்டுள்ளது. மகளிர் தினத்தன்று நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.!