தமிழகம்

கஜா உருவானது எப்படி? ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு தொகுப்பு!

Summary:

how gaja formed and attacked

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அனைத்தையும் சூறையாடிய கஜா புயல், என்று? எப்போது? உருவாகத் துவங்கியது; எப்படி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கியது என்பதை பற்றி பார்ப்போம்.

கடந்த 10ம் தேதி அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்தது. காற்றின் திசை மாறியதால் அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அதனால் அது புயலாக மாறி மியான்மரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தென் கிழக்கு திசையில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. இரண்டு காற்றழுத்தங்கள் எதிர் மறையான நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டதால் வடக்கு நோக்கி சென்ற புயல் தென் மேற்கு திசைக்கு இழுக்கப்பட்டது. அப்போது இரண்டு காற்றழுத்தங்களும் ஒன்றாக இணைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இலங்கையால் பெயரிடப்பட்ட இதற்கு யானை என்று பொருளாகும்.

அந்த கஜாதான் கடந்த 5 நாட்களாகவே தமிழகத்தின் எந்த இடத்தில கரையை கடக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கியது. துவக்கத்தில் சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் ஆங்காங்கே உருவான காற்றழுத்தங்கள் புயலின் திசையை மாற்றிவிட்டன. 

இதனைத்தொடர்ந்து இறுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே புயல் கரையைக் கடந்தது. மேலும் அந்த புயல் தமிழகத்தின் உள் மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய பகுதிகளை கடந்து கேரளாவில் முன்னார் கொச்சி பகுதிகளை தாண்டி அரபிக்கடலை சென்றடைந்தது.

செல்லும் வழி எங்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள், நெற்பயிர்கள் என அனைத்தையும் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கரம்பக்குடி, மலையூர், கந்தர்வகோட்டை, மாங்கோட்டை, வடகாடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் அளவிற்கு புரட்டிப் போட்டு விட்டது.


Advertisement