இப்படி இறங்கிட்டாங்களா... செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் ரூ.2 லட்சம் தருகிறோம்..! 3 இளைஞர்களை சித்ரவதை செய்த சிபிசிஐடி..! வெளியான பகீர் வாக்குமூலம்..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் தங்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து சித்ரவதை செய்ததாக 3 இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். சிறுமி மாயமாகி 48 நாட்களுக்கும் மேலாகியும் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், இந்தப் புகார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
48 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி ஹேமலதா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலையில் திடீரென மாயமானார். சிறுமியைத் தேடி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, 50 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைகீழாகத் தொங்கவிட்டு தாக்கியதாக புகார்
இந்த வழக்கு விசாரணைக்காக தங்களை சிபிசிஐடி போலீசார் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து தாக்கியதாக ஆலம்பூண்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (26), கமல்ராஜ் (25), ரேணு (30) ஆகிய 3 இளைஞர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக விழுப்புரத்தில் வைத்து தங்களது கை, கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு லத்தியால் தாக்கி சித்ரவதை செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் உடல் மற்றும் மன ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்டால் ரூ.2 லட்சம் தருவதாக பேரம்?
சிறுமி மாயமான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் ரூ.2 லட்சம் தருவதாகவும், வழக்கிலிருந்து விடுவித்துவிடுவதாகவும் போலீசார் கூறியதாக அந்த இளைஞர்கள் செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாரின் மிரட்டல் மற்றும் சித்ரவதை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமி மாயமான வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போலீசார் மீது இளைஞர்கள் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட தரப்பின் விளக்கத்தையும் கேட்டறிந்த பின்னரே உண்மை நிலை தெரியவரும்.