தமிழகம்

பட்டப்பகலில் தானாக நகர்ந்துசென்ற அரசு பேருந்து.. பின்னாலையே ஓடிச்சென்று பார்த்த ஓட்டுனருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

திருச்சி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனையைச் சேர்ந்த தீபாவளி அரசு சிறப்புப் பேருந்து ஒன்றை ஓட்டுநர் சரவணகுமார் இயக்க அப்பேருந்தில் ரவி என்பவர் நடத்துனராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து கரூரில் இருந்து திருச்சிக்கு மதியம் 2.30 மணியளவில் வந்துள்ளது.

பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் நேரகாப்பாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அருகில் இருந்த டீ கடையில் டீ அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் நிறுத்திய பேருந்து அங்கிருந்து நகர்ந்து செல்வதை கவனித்த அவர்கள் கத்திகொண்டே பேருந்து பின்னால் ஒட்டியுள்ளனர்.

ஆனால் அதற்குளாக மர்மநபர் ஒருவர் அந்த பேருந்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டார். இதனை அடுத்து பேருந்து சுமார் 1  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டரி பள்ளி அருகில் இருக்கும் சிக்னலில் நின்றுள்ளது. பேருந்து பின்னாலையே துரத்தி சென்ற ஓட்டுநர், நடத்துனர் மற்றும் போலீசார் சிக்னலில் நின்ற பேருந்தை மீட்டதோடு பேருந்தை ஓட்டிச்சென்ற நபரையும் கைது செய்தனர்.

இதனை அடுத்து அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் கஞ்சா போதையில் இருப்பதும், தனது பெயர் அஜித் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முன்னுக்கு பின் முரணாக பேசிய அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement