இதுபோன்ற அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே சிறந்தது.! மக்களே உஷார்.! காவல்துறை எச்சரிக்கை.!

இதுபோன்ற அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே சிறந்தது.! மக்களே உஷார்.! காவல்துறை எச்சரிக்கை.!



dont-attend-unknown-video-call

தற்போது சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. வங்கியிலிருந்து போன் செய்வதாக கூறி, லட்சக்கணக்கான ரூபாயை சுருட்டியுள்ளதாக தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஆன்லைன் வங்கி மோசடி அதிகரித்து வரும் சம்பவங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் வங்கிகள்.

தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு கைகொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது. தற்போது இணைய வழியாக நடைபெறும் பாலியல் மோசடி, தனிநபர் பழிவாங்கல் போன்ற குற்றங்களும் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா அவர்கள் அவரது முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எல்லா தொடர்பு சாதனங்களையும் மக்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்துவது போலவே, மோசடிப் பேர்வழிகளும் எல்லா உத்திகளையும் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தொடர்பு எண்கள் எளிமையாகக் கிடைக்கும் நபர்களிடம் இந்த மோசடி அதிகரித்துள்ளது. 

மிகச் சமீபமாக வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் இந்த மோசடி நடந்து வருகிறது.
முதலில் வாட்ஸ் அப் வீடியோ கால் வழியாக அழைப்பு வருகிறது. யாரோ தெரிந்தவர்களாக இருக்கும் என்று அழைப்பை ஏற்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அரைகுறை உடையுடன் அல்லது நிர்வாணமாக வீடியோவில் பெண் இருக்கிறார். வீடியோ காலை எடுப்பவர்கள் சுதாரித்து, அதனைக் கட் செய்ய சில விநாடிகளாவது ஆகும். இந்த சில விநாடி வீடியோ காலில் தெரியும் உங்கள் முகம் அவர்களுக்குப் போதுமானது.

கால் கட்டான சில நிமிடங்களில் ஒரு வீடியோ கிளிப் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. அதில் நிர்வாணமான பெண் பாதி திரையிலும், வீடியோ காலினை ஏற்றவர் பாதி திரைதிரையிலும் இருக்குமாறு ஸ்கிரீன் ரிகார்டிங் செய்யப்படடுகிற வீடியோ அது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு பேரம் பேசப்படுகிறது. இதே வீடியோ கால் பெண்களுக்கு வரும் போது இன்னொருபுறம் நிர்வாண ஆண்களும் தோன்றுகிறார்களாம்.

இது புதிதாகத் துவங்கப்பட்டுள்ள குழு மோசடி போல தெரிகிறது. பலரும் இந்த மோசடியில் சிக்கி பணம் இழந்ததாக தெரிவிக்கின்றனர். அரிதாக மிகச் சில நண்பர்கள் இதிலிருந்து தப்பியிருக்கிறார்கள். இது குறித்து  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் நமது தொடர்பு எண்ணை யாருக்கும் தராமல் பாதுகாப்பது சாத்தியமில்லை. நீங்கள் எண்ணை யாருக்கும் கொடுக்காவிட்டாலும், நீங்கள் அங்கம் வகிக்கும் ஏதேனும் ஒரு குழுவில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். 

இது போன்ற சிக்கல்களிலிருந்து தப்பிக்க எளிமையான ஒரே வழிதான் இருக்கிறது. தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்காமல் இருப்பதே சிறந்தது. லாக் டவுன் காலத்தில் புதுசு புதுசா யோசிக்கிறார்கள் போல. எச்சரிக்கை நண்பர்களே.. என குறிப்பிட்டுள்ளார்.