தேமுதிக கூட்டணி குறித்து நடக்கும் ஆலோசனை கூட்டம்!! காத்திருக்கும் தொண்டர்கள்!!
இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தே.மு.தி.க. ஆனால் அதில், தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க ரஜினிகாந்த் அவரது சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரடியாக சென்றார்.

இந்நிலையில், விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என கூறியிருந்தார்.
அதிமுக, பாஜக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேமுதிக சார்பில் கூட்டணி பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழுவினருடன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.