தமிழகம்

கொங்கு வட்டாரத்தமிழும், "கடத்தல் மண்" சம்பவமும்... விஷமத்துடன் பரப்பியதால் மாற்றம் செய்த உரிமையாளர்.! 

Summary:

கொங்கு வட்டாரத்தமிழும், கடத்தல் மண் சம்பவமும்... விஷமத்துடன் பரப்பியதால் மாற்றம் செய்த உரிமையாளர்.! 

கோயம்புத்தூர் வட்டார மொழியில் பேசப்படும் வார்த்தையை கடை விளம்பரத்தில் வைத்த மணல் சப்ளை நிறுவனம், வட்டார மொழியை புரிந்து கொள்ளாதவர்களால் சர்ச்சையில் சிக்கி ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. 

தமிழ் மொழி அந்தந்த ஊர் வட்டாரத்திற்கு ஏற்ப சிறிது மாறுபடும். கோவை வட்டார மொழியில் பழைய கட்டிடத்தை இடித்து எடுக்கப்படும் தூசி மண் குவியலை "கடத்தல் மண்" என்று அழைப்பார்கள். இதனை வைத்து வீடுகளின் முன்புறம் உள்ள குழிகளை நிரப்பவும், அஸ்திவாரத்தின் நடுவே சமணம் செய்யவும், பாழடைந்த கிணற்றை நிரப்பவும் உபயோகம் செய்யப்படும். 

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையார்பாளையம் பகுதியில் வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் விளம்பர பலகையில் 'கடத்தல் மண்' எடுத்து தரப்படும் என வட்டார மொழியில் எழுதப்பட்டு இருந்துள்ளது. இதனை புகைப்படம் எடுத்தவர் விபரீத தலைப்புடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை தவிர்த்து பிற பகுதியில் 'கடத்தல் மண்' என்பதன் பொருள் அனுமதியின்றி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணலை குறிக்கும் என்பதால் அது பேசுபொருளானது. இந்த விஷயம் காவல் துறையினரின் கவனத்திற்கும் சென்றது. இதனையடுத்து, துடியலூர் காவல் துறையினர் வாசு நிறுவனத்திற்கு நேரடியாக தகவலை தெரிவித்துள்ளனர். 

அதிகாரிகளின் அறிவுரை மற்றும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வாசு மணல் சப்ளையர் நிறுவனமும், தனது விளம்பர பலகையில் உள்ள 'கடத்தல் மண்' என்பதை 'கட்டிடம் இடித்த மண் எடுத்து தரப்படும்' என திருத்தும் செய்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் கொங்கு மண்டலத்தின் வட்டார வழக்கு சொல்லை எப்படி நீங்கள் தவறாக எண்ணலாம்? என போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.


Advertisement